கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்சி கேட் பகுதியில் நடைபெற்ற 'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் – சிங்கப்பெண்ணே எழுந்து வா' மாநாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சௌமியா அன்புமணி, என்.எல்.சி. நிறுவனத்தின் நிர்வாகத் திறனற்ற செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நெய்வேலியைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, அந்நிறுவனம் ஈட்டும் கோடிக்கணக்கான லாபத்தில் ஒரு பகுதியை வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குக் கட்டுவதற்குப் பயன்படுத்துகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். மக்கள் விவசாயம் செழிப்பாக இருந்த தன்னூற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக் காட்டிய சௌமியா அன்புமணி, அந்த மக்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்தி அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டது என்றார். வீடு, நிலம் கொடுத்த மக்களுக்கு இன்று வரை நிரந்தர வேலை வழங்கப்படாமல், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியில் அமர்த்தி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டினாலும், அதில் வரும் லாபத்தின் சி.எஸ்.ஆர். நிதியை அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் உதாசீனப்படுத்துகிறது என்றும், இந்த நிதியை வட மாநிலங்களில் கோவில் கட்டுவதற்குச் செலவிடுவதாகவும் அவர் கூறினார். என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து அன்புமணி தொடர்ந்து போராட்டக் களம் கண்டுவருவதைச் சுட்டிக் காட்டிய சௌமியா அன்புமணி, மீண்டும் என்.எல்.சி. நிர்வாகம் நிலங்களைக் கையகப்படுத்த முயன்றால் தானும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: சௌமியா அன்புமணி அதிரடி! 10 கோரிக்கைகளுடன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 'மகளிர் உரிமை மீட்புப் பயணம்'!
தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்த செளமியா அன்புமணி, கடந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசாகக் கரும்பு விநியோகம் செய்தபோது, தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல் ஆந்திராவில் இருந்து கரும்பை வாங்கி விநியோகம் செய்தது என்றும், அன்புமணி அறிக்கை விட்ட பின்னர்தான் தமிழக விவசாயிகளிடமிருந்து மீண்டும் கரும்பைக் கொள்முதல் செய்தனர் என்றும் தெளிவுபடுத்தினார். இதேபோல் இந்த ஆண்டும் தமிழக விவசாயிடமிருந்து கரும்பை வாங்கவில்லை என்றால், அன்புமணி அறிக்கை விடுவார் என்றும் எச்சரித்தார்.
போதைப் பொருள்கள் காரணமாகத் தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட அவர், போதைப் பொருள் இல்லாத ஆட்சியை உருவாக்க வேண்டுமென்றால் பா.ம.க. வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியம் என்றும் வலியுறுத்தினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடையை மூடுவேன் என்று கூறிவிட்டு, இப்போது சந்துக்கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும் எள்ளல் தொனியில் விமர்சித்தார். இறுதியாக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக விழுக்காடு பெண்களுக்கு இருப்பதால், நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டும், பெண்களாகிய நாம் சாதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!