சென்னை: தவெக ஆட்சியமைப்பில் அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ மோகன் ஆகியோர் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். இந்த நகர்வு அதிமுகவில் சிவி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. இபிஎஸ் தரப்பும், சிவி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனித்தனியாக இயங்கின. தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயற்சி செய்ததாகக் குற்றம்சாட்டிய வேலுமணி அணி, தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தார்.
தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த சிவி சண்முகம் தரப்புக்கு, வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் நிபந்தனைகள் காரணமாக அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு வலுவான ஆதரவு அளித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ மோகன் இருவரும் சென்னையில் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பு அதிமுகவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ் தரப்பு இந்த இரு எம்எல்ஏக்களின் தாவலை வரவேற்றுள்ள நிலையில், சிவி சண்முகம் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. அதிமுகவில் இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் அணியை நோக்கி நகர்வார்களா என அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கணித்து வருகின்றன.
இந்த நகர்வுகள் எதிர்காலத்தில் அதிமுகவின் ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் உத்திகளை பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது இபிஎஸ் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் தொடர்ந்து நடைபெறும் இந்த உள் மோதல்கள் கட்சியின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!