தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், இன்று திருச்சியில் தொடர்ந்தார். காலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் வாக்கிங் சென்ற ஸ்டாலின், சாலையோர டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
இதனை மேற்கோள் காட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தர்மபுரியில் தேநீர் கடையில் அமர்ந்து ஓட்டு சேகரித்ததையும் நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின், தனது அறிக்கையில் முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார்.
“திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம் வளர்ந்த இடம். அரசியலையும், உலக நடப்புகளையும் அறிந்துகொண்ட இடம். டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் ஆகியவை திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக்கழகங்கள்” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவெகவையும், விஜயையும் விமர்சிக்க மாட்டேன்!! பல்டி அடித்த சுந்தர்.சி!

திமுகவின் வேர்கள் எங்கெல்லாம் பரவியுள்ளன என்பதை டீக்கடை கலாச்சாரத்துடன் இணைத்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்திய இந்தக் கருத்து, கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பாரம்பரியம், மக்களோடு மக்களாக இருந்து அரசியல் செய்யும் பண்பு ஆகியவற்றை எளிய மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பதிவு.
கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர்கள் டீக்கடைகளில் அமர்ந்து பிரசாரம் செய்யும் காட்சிகள் அதிகம் பார்க்கப்படுகின்றன. உதயநிதி ஸ்டாலின் தர்மபுரியில் பஸ்சில் ஏறி ஓட்டு சேகரித்ததும், முதல்வர் ஸ்டாலின் டீக்கடையில் தேநீர் அருந்தியதும், திமுகவின் ‘மக்களோடு மக்கள்’ என்ற அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிக்கை திமுக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீக்கடை என்பது திமுகவுக்கு வெறும் தேநீர் அருந்தும் இடம் மட்டுமல்ல, கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த இடம் என்று ஸ்டாலின் நினைவூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீட் கிடைக்காத விரக்தியில் குடைச்சல் கொடுக்கும் குட்டி தலைகள்! தீராத தலைவலியில் இடைத்தலைவர்கள்!