தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரஜினிகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பு உத்தியை கையாண்டுள்ளார். ரஜினியின் பிரபல பாடல்கள் மற்றும் வசனங்களை தனது பிரசாரப் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்.
தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, ஸ்டாலின் சமீபத்திய பிரசாரக் கூட்டங்களில் ரஜினியை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு காய்களை நகர்த்தியுள்ளார். ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “ரஜினியின் சினிமா பட்டம் சூப்பர் ஸ்டார். ஆனால் இந்தத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான்” என்று கூறினார்.
மேலும், ‘என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா’ என்ற பிரபல ரஜினி பாடலின் வரிகளை சற்று மாற்றி பாடி, ரசிகர்களை ஈர்க்க முயன்றார். மற்றொரு இடத்தில், மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா பார்லிமெண்ட்டில் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி, “பாட்ஷா படத்தில் வரும் வசனத்தைப் போல, மாணிக்கம் போல் அமைதியாக பிரசாரம் செய்து வந்த எங்களை, பாட்ஷா மாதிரி மத்திய அரசு மாற்றிவிட்டது” என்று பேசினார்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!

ரஜினி இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க. மற்றும் பாஜக தரப்பில் ரஜினியின் ஆதரவைப் பெற ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதனால் ரஜினி ரசிகர்களின் வாக்குகள் எந்தக் கட்சிக்கு செல்லும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில், ரஜினியின் பாணியில் பேசி அவரது ரசிகர்களை ஈர்க்கும் ஸ்டாலினின் முயற்சி, தி.மு.க. வட்டாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “ரஜினி ரசிகர்களின் ஓட்டுகள் தி.மு.க.வுக்கு வராதா என்பதுதான் முதல்வரின் எதிர்பார்ப்பு” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கும் இந்த கடைசி கட்டத்தில், பிரபலங்களின் ரசிகர்களை கவரும் வகையில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் உத்திகள் அதிகரித்து வருகின்றன. ஸ்டாலினின் ரஜினி ஸ்டைல் பிரசாரம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு தெரியவரும்.
இதையும் படிங்க: எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!