தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் காணொலிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. பல்வேறு திட்டமிடல்களைச் செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்த நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராக உள்ளனர். யார் வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். களம் நம்முடையதுதான்" என்று உறுதிபட தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகளை மீறி தேர்தல் ஆணையம் பணியைத் தொடங்கிய நிலையில், இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதையும் படிங்க: திருச்சி, புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!! துவங்கி வைக்கும் அசத்தல் திட்டங்கள்! பறந்த அதிரடி உத்தரவு!
"பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர். குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே (BLO) புரியவில்லை என்று சொல்கிறார்கள். தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது. அதேபோல் தகுதியற்ற எவரையும் சேர்க்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், "மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

இந்தப் பணி ஜனநாயகத்தின் அடிப்படையைப் பாதுகாக்கும் முக்கியமான பணி என்று அவர் சுட்டிக்காட்டினார். தி.மு.க.வினர் தொடர்ந்து களத்தில் இறங்கி, வாக்காளர் பட்டியல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணி நவம்பர் 1 முதல் தொடங்கி, டிசம்பர் 9 வரை நடைபெறும். இதில் போலி வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, திருத்தங்கள் ஆகியவை செய்யப்படும். ஆனால், இந்தப் பணி தி.மு.க. ஆதரவாளர்களை இலக்கு வைத்து செய்யப்படுவதாக கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
ஏற்கெனவே பல மாவட்டங்களில் தி.மு.க.வினர் BLOக்களுடன் மோதல், புகார்கள் அளித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தி.மு.க.வின் இந்த எச்சரிக்கை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "களம் நம்முடையது" என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, கட்சி நிர்வாகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்படும் எந்த முறைகேடும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: "உதயநிதி மீதான என் நம்பிக்கை..." - முதல்வர் பேச, பேச கண் கலங்கிய துணை முதல்வர்...!