மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விமான விபத்துக்குப் பிறகு, இன்று (ஜனவரி 31, 2026) மாலை ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெறவுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினருமான சுநேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்கிறார். மும்பையில் மாலை 5 மணியளவில் எளிமையான விழாவில் இந்த பதவியேற்பு நடைபெறும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 28) அஜித் பவார் மும்பையில் இருந்து பாராமதி நோக்கி தனி விமானத்தில் புறப்பட்டார். புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பு விமானம் தரையில் மோதி வெடித்தது. இந்த கொடூர விபத்தில் அஜித் பவார், விமானி சுமித் கபூர், துணை விமானி சாம்பவி பாடக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, அவரது தனிப் பாதுகாவலர் விதீப் ஜாதவ் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலை உலுக்கியது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா துணை முதல்வராகிறார் அஜித்பவார் மனைவி?! இன்று பதவியேற்பு!

அஜித் பவார் என்சிபி தலைவராகவும், மாநில துணை முதல்வராகவும் முக்கிய பங்கு வகித்து வந்தார். அவரது திடீர் மறைவால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார். இதன்மூலம் மகாராஷ்டிரா வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை முதல்வராக சுநேத்ரா பதிவாகிறார். இது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
சுநேத்ரா பவார் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அஜித் பவாரின் மறைவால் காலியான பாராமதி சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. என்சிபி தலைமை அவரை முன்னிலைப்படுத்தி தென் மகாராஷ்டிராவில் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் சுநேத்ரா பவார் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றாலும், மகாராஷ்டிரா அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அஜித் பவாரின் பாரம்பரியத்தை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய சுநேத்ரா பவார் முன்வருவது கட்சியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாநில மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: அஜித்பவாரின் மனைவிக்கு அமைச்சரவையில் இடம்? அமைச்சராகிறார் சுனேத்ரா பவார்? மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?