புதுடில்லி/மதுரை: தமிழகத்தின் ஆறு படை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. கோயிலை மத்திய தொல்லியல் துறை (ASI) கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகள் புராதன வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தி.குன்றம் தீபத்தை எதிர்ப்பவர்களுக்கு அரசியலில் இடமில்லை!! பாஜ புதிய தேசிய தலைவர் வார்னிங்!
கோயிலின் பழமையையும், புனிதத்தையும் காப்பாற்றுவதற்காக முழு கோயிலையும் மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 24 மணி நேரமும் நிரந்தரமாக விளக்கு ஏற்றி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தீபங்களை ஏற்றி முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மேற்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதுரை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இப்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு எழுப்பப்பட்டுள்ளது. இது கோயில் நிர்வாகம், பக்தர்களின் வழிபாட்டு உரிமை, தொல்லியல் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடாக விளங்குவதால், இந்த வழக்கு முருக பக்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பக்தர்களின் வழிபாட்டு சுதந்திரத்தை பாதிக்குமா என்பது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணை இந்த விவகாரத்துக்கு எவ்வாறு தீர்வு காணும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!