உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. “எந்த நீதிமன்றமும் ஒரு பெண், குறிப்பாக சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, கருவை சுமக்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது” என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
15 வயது சிறுமியின் 28 வார (7 மாத) கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான கருத்தைப் பதிவு செய்தது.
நீதிபதிகள் கூறியதாவது: “பிறக்கப் போகும் குழந்தையின் நலனை விட, கருவை சுமக்கும் பெண்ணின் விருப்பமும், உடல்-மன நலனுமே முக்கியம். விருப்பத்திற்கு மாறாக ஒரு சிறுமியை கர்ப்பத்தைத் தொடரச் சொல்வது, அவரது மனநலத்தை, கல்வியை, சமூக அந்தஸ்தை மற்றும் முழு எதிர்காலத்தையும் பாதிக்கும். தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமையின் கீழ் (அரசியல் சாசனம் பிரிவு 21), தன் உடல் மற்றும் இனப்பெருக்கம் குறித்து முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு” என்றனர்.
இதையும் படிங்க: மத நம்பிக்கையில் தலையிடுறப்போ நீதிமன்றங்கள் நிதானமா இருக்கணும்!! சபரிமலை வழக்கில் பந்தளம் தரப்பு வாதம்!

இந்த வழக்கில் சிறுமி ஏற்கனவே இரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. “விருப்பமின்றி குழந்தையைப் பெற்றெடுக்க நிர்ப்பந்திப்பது, அவருக்கு ஈடு செய்ய முடியாத மன உளைச்சலையும் உடல் பாதிப்பையும் ஏற்படுத்தும். தேவையற்ற கர்ப்பத்தை சுமக்கச் சொல்வது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு சமம்” என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
ரகசியமாக இயங்கும் கருக்கலைப்பு மையங்களை நோக்கி பெண்கள் திரும்பும் அபாயத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இறுதியில், தகுந்த மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, கருக்கலைப்பு தொடர்பான வழக்குகளில் பெண்ணின் விருப்பமும் தனியுரிமையும் முதன்மை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் நறுக் கேள்வி!