தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தச் சமுதாயம் பாரம்பரியமாக அ.தி.மு.க.வுக்கு வலுவான ஆதரவு அளித்து வந்தது.
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா வரை முத்தரையர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு பெரும் பலமாக இருந்தன. பல தொகுதிகளில் அ.தி.மு.க. தொடர் வெற்றிகளைப் பெற்றதற்கு இந்த ஆதரவு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு இந்தச் செல்வாக்கு சற்று குறையத் தொடங்கியது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.
இதையும் படிங்க: அமித் ஷா சீக்ரெட் ஆப்ரேஷன் சக்சஸ்!! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! 3 நாள் விசிட்!
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் முத்தரையர் சமுதாயத்தை கவரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆலங்குடி தொகுதியில் வென்ற முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த சிவ.வீ. மெய்யநாதனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

மேலும், அம்பலக்காரர், வளையர் போன்றோருக்கு ஜாதி சான்றிதழ் பிரச்னை தீர்க்கப்பட்டது. பெரும்பிடுகு முத்தரையர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் முத்தரையர் சமுதாயப் பெண்களில் 90 சதவீதத்தினர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்திய ரகசிய சர்வேயில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் கணிசமாக தி.மு.க.வுக்கு திரும்பும் என தெரியவந்துள்ளது. சர்வேயின்படி, தி.மு.க.வுக்கு 50 முதல் 55 சதவீத ஆதரவு, அ.தி.மு.க.வுக்கு 30 முதல் 35 சதவீதம், விஜயின் த.வெ.க.வுக்கு 7 முதல் 10 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 3 முதல் 3.5 சதவீதம் ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சர்வே முடிவு தி.மு.க. தலைமையை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை அறிந்த பா.ஜ.க. தேசிய தலைமை, முத்தரையர் சமுதாயத்தின் மீது அதிக கவனம் செலுத்துமாறு அ.தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
2026 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஓட்டு மாற்றம் தி.மு.க.வுக்கு பெரும் நன்மையைத் தரும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: எத்தனை தொகுதிகள் எங்களுக்கு? முதல்வர் ஸ்டாலினோடு காங்கிரஸ் ஐவர் குழு டிஸ்கஷன்!