சென்னை: பத்திரப் பதிவு துறையில் பெரும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பு முறையாகக் குறிப்பிடப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் மாவட்ட பதிவாளர்கள் ஆறு பேர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவுத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட பதிவாளர் தணிக்கைப் பொறுப்பில் இருப்பார். அவரது தலைமையிலான குழு, சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் பத்திரங்களை ஆய்வு செய்து வருவாய் இழப்பு ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கும். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
கடந்த ஆட்சியில் பத்திரத் தணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போதைய அரசின் குறுக்கீடு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி! புலி பட சிக்கல்! முடித்து வைத்தது சென்னை ஹைகோர்ட்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பதிவுத் துறை ஐஜி முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்த கோப்புகளை தயார் செய்திருந்தார். புதிய மேலதிகாரிகள் இந்த நிலுவை கோப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் திருப்பத்தூர் செந்தூர் பாண்டியன், கிருஷ்ணகிரி பாலசுப்ரமணியன், தர்மபுரி கனகராஜ் உள்ளிட்ட ஆறு மாவட்ட பதிவாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் நிர்வாக காரணங்களுக்காக 43 சார்-பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகப் பணியில் இருந்தவர்கள் பத்திரப் பதிவு பணிக்கும், பத்திரப் பதிவில் இருந்தவர்கள் நிர்வாகப் பணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் பதிவுத் துறையில் நீண்டகாலமாக நிலவும் முறைகேடுகளுக்கு எதிரான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பத்திரப் பதிவின்போது முறையான மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!