“கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” அமைச்சர் ரமேஷின் பதிலடியால் சட்டசபையில் சிரிப்பலை
சென்னை: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர், அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தி.வெ.க., அரசு பிரசாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்தார். மேலும், அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் ‘ரீல்ஸ் கான்டென்ட்’ போன்று பேசுவதாகவும், தி.மு.க., ஆட்சியில் ‘ஆக்ஷன்’ மட்டுமே இருந்ததாகவும், ‘ஆக்டிங்’ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “அந்த டெக்னிக்கை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்” எனக் கூறினார். இதை கேட்ட முதல்வர் விஜய் சிரித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: லாட்டரி நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் Vs உதயநிதி காரசார விவாதம்!
தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரமேஷ் கடுமையாக பதிலளித்தார்.
“கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக ரூ.350 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என அறிவிக்கப்பட்டது. அது என்ன ஆனது என விவசாயிகள் பல இடங்களில் கேட்டு வந்தனர். கொள்முதலுக்கு பிறகான வாகன போக்குவரத்தில் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்” என அவர் கூறினார்.
மேலும், கரும்பு கொள்முதல் விலை தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். அப்போது, “யார் எல்லாம் விவசாயி என்று சொன்னார்? ஒரு முக்கியமான விவசாயியை அண்ணன் மறந்துவிட்டார். கரும்பு தோட்டத்துக்குள் கான்கிரீட் போட்டு நடந்த ஒரு முக்கியமான விவசாயியைப் பற்றி சொல்ல மறந்துவிட்டார்” என அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
தொடர்ந்து, “இவர்கள் கதையெல்லாம் சர்க்கரையை எறும்பு சாப்பிட்டது, சாக்கை கரையான் சாப்பிட்டது என்பது போல் இருக்கிறது” எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தி.மு.க., ஆட்சியில் அதிகாலை நேரத்தில் முதல்வரிடம் இருந்து போன் வரும் என்பதால் அமைச்சர்கள் பதற்றத்தில் இருந்ததாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். அதற்கு அமைச்சர் ஆனந்த், “நாங்களும் தினமும் டென்ஷனில்தான் இருக்கிறோம். சின்ன வாய்க்கால் பிரச்னைக்குக்கூட முதல்வர் போன் செய்து, சரி செய்துவிட்டீர்களா என கேட்கிறார்” என்றார்.
இதையடுத்து, “புஸ்சி ஆனந்த், பிஸி ஆனந்தாகத்தான் இருக்கிறார்” என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதும், சட்டசபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. வேளாண் பட்ஜெட் விவாதத்தைவிட, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த வார்த்தைப் போர் அவையின் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு