சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தை மாற்றும் பணிகள் வேகமெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கோட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றப் பணியை முடிக்க பொதுப்பணித்துறை ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அந்த கோரிக்கையை அரசு நிராகரித்து மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வரும் கோட்டை வளாகம் பாரம்பரிய கட்டடமாக இருப்பதால், இயற்கை காற்றோட்டம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அறைகள் முழுமையாக குளிர்சாதன வசதியையே சார்ந்திருப்பதால், அதிக வெளிச்சம் மற்றும் திறந்த சூழல் கொண்ட அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இருந்து சென்னை துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியை நேரடியாகக் காண முடியும் என்பதால், அந்த இடம் முதல்வர் அலுவலகத்திற்கு ஏற்றதாக கருதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புல்லட் புரூப் கண்ணாடி உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் அலுவலகம் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குழுவில் கட்டட வடிவமைப்பாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்து, புதிய அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 10-வது தளம் மட்டுமின்றி, 9-வது தளத்தையும் முதல்வர் அலுவலகத்தின் நிர்வாக பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!