கர்நாடகா: டெல்லி பயணத்தை முடித்துக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், இன்று கர்நாடகாவின் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் தரிசனம் செய்யப் புறப்பட்டுள்ளார். இன்று மதியம் மங்களூரு செல்லும் விமானத்தில் பயணம் செய்யும் அவர், அங்கிருந்து கொல்லூர் சென்று சிறப்பு பூஜைகளில் பங்கேற்க உள்ளார்.
உடுப்பி மாவட்டம், பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், தென்னிந்தியாவின் மிக முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அரசியல்வாதிகள், திரையுலகினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி இங்கு தரிசனம் செய்கின்றனர்.
தமிழகத்துடன் இந்தக் கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மூகாம்பிகையின் தீவிர பக்தராக இருந்தார். அவர் கோவிலுக்கு தங்க வாள் காணிக்கை செலுத்திய வரலாறு இன்றும் பக்தர்களிடையே நினைவுகூரப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அன்று அணில், இன்று பீஸ் கேரியர்! தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தேவி இந்தக் கோவிலுக்கு வந்து மூகாம்பிகையை வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் இன்று மூகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிரார்த்தனை செய்ய உள்ளார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தரிசனத்துக்குப் பிறகு மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் விஜய்யின் இந்த பக்தி பயணம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர அரசியல் பயணங்கள் மற்றும் அலுவல் பணிகளுக்கு இடையில் ஆன்மீக தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கியுள்ள முதல்வரின் நடவடிக்கை பலரும் பாராட்டுகின்றனர். கொல்லூர் மூகாம்பிகை கோவில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு சக்தி தரும் இடமாகவும், மன அமைதி தரும் தலமாகவும் புகழ் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய்யின் பாதுகாப்புக்கு ஏற்ப கர்நாடகா போலீஸார் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பயணம் முடிந்ததும் முதல்வர் சென்னையில் தனது அலுவல்களைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!