உலகம் முழுவதும் பல்வேறு வானிலை மாற்றங்களையும் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடிய எல் நினோ நிகழ்வின் தாக்கத்தை முன்கூட்டியே மதிப்பிட்டுத் தீவிரமாகக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சிறப்பு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளதற்குச் சுற்றுச்சூழல் அமைப்பான 'பூவுலகின் நண்பர்கள்' தமிழ்நாடு முதலமைச்சருக்குத் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், எல் நினோ காரணியால் உலகளவில் இயல்புக்கு மாறான வானிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் மாதமே எல் நினோ பாதிப்புகள் குறித்த விரிவான கோரிக்கை அறிக்கை ஒன்றை 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்திருந்தது.

இது குறித்துப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எல் நினோ தாக்கத்தின் காரணமாக வெப்ப அலை (Heatwave), வறட்சி, தீவிர மழை மற்றும் நீரிடி போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை நாம் அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். குறிப்பாக வேளாண் துறையில் இதன் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால், இதனை முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கொள்வதற்கான 'ஓராண்டு சிறப்பு திட்டத்தை' தமிழ்நாடு அரசு உடனடியாக வடிவமைக்க வேண்டும். மேலும், ஒன்றிய அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது போன்ற சிறப்பு 'எல் நினோ கண்காணிப்பு அலகு' தமிழ்நாட்டிலும் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, எல் நினோவின் தாக்கத்தைக் கண்டறிந்து கண்காணிக்க வல்லுநர் குழுவை உடனடியாக அமைத்து உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது ஆழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!