தமிழக காவல்துறையில் பணியாற்றும் சில இளம் போலீசார் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி வருவதாக தெரியவந்ததை தொடர்ந்து, அவர்களை ரகசியமாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர்கள் தலைமையில் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் பலர் பணத்தை இழந்து கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலர் உயிரிழக்கும் அளவுக்கு இந்த பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், காவல்துறையிலும் சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.
காவல்துறை வட்டார தகவலின்படி, 25 முதல் 35 வயதுக்குட்பட்ட சில காவலர்கள் ஆன்லைன் சூதாட்ட பழக்கத்தில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆயுதப்படையில் பணியாற்றும் சில காவலர்கள் அதிகளவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் மோதல்?! சென்னை ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது! பகீர் பின்னணி!

இதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் போலீசாரை கண்டறிந்து ஆலோசனை வழங்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் டிஎஸ்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, காவலர்களின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் தேவையற்ற முறையில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளம் வயது காவலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் தொடர்பாக வாரந்தோறும் டிஜிபி அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறையில் ஒழுக்கம் மற்றும் பணித்திறனை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை பாதிக்கும் ஆன்லைன் சூதாட்ட பிரச்சனை தற்போது காவல்துறைக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!