திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளதாக அறிவிப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் மார்ச் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கேப்டன் ஆலயத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
தேமுதிக ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படலாம். விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்துவது மற்றும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காண்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.
புரட்சி அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சார பயணம் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் பங்கு குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இதையும் படிங்க: "கேப்டனின் கனவை நனவாக்கிய ஸ்டாலின்" - எல்.கே. சுதீஷ் எம்பி நெகிழ்ச்சிப் பேட்டி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் வரும் 23-ஆம் தேதி காலை 10:00 மணிக்குத் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தேமுதிக தலைமை அலுவலகம் இன்று (மார்ச் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே முதல்வர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே அடுத்த ஆட்சியை அமைக்கும் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்ற கேப்டன் விஜயகாந்தின் தாரக மந்திரத்துடன் தேமுதிக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!