ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் மதுபான ஊழல் வழக்கு, மாநில அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மாதந்தோறும் சராசரியாக 50 முதல் 60 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச காவல்துறையால் உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில், மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் மூலம், அரசே நேரடியாக மதுபானக் கடைகளை நடத்தி, மது விற்பனையை கட்டுப்படுத்தியது.

இதற்கு முன்னர், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், இந்த புதிய கொள்கை முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின்படி, இந்த மதுபானக் கொள்கையைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட மதுபான பிராண்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக தானியங்கி ஆர்டர் முறைமை முடக்கப்பட்டது. இதனால், மாநிலத்தின் மதுபான வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழலின் மொத்த மதிப்பு சுமார் 3,500 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர்பாபா..! ரூ.40 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!
போலீஸ் குற்றப்பத்திரிகையில், ரூ.3,500 கோடி ஊழலின் மூளையாக முதல் குற்றவாளி காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார் என்றும் லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம், ராஜசேகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம் என்றும் கூறினார். அதனை 5-வது குற்றவாளி விஜய் சாய் ரெட்டி, 4-வது குற்றவாளி மிதுன் ரெட்டி, 33-வது குற்றவாளி பாலாஜி ஆகியோருக்கு ராஜசேகர் ரெட்டி அனுப்பி வைப்பார் என்றும் அந்த லஞ்ச பணம் சுமார் 60 கோடி ரூபாயை ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிட்னி வியாபார பொருளா? செல்வபெருந்தகை ஆவேசம்..!