தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் அடையாளப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) போட்டியிடும் தொகுதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் இத்தேர்தலில் கடலூர் மாவட்டத்தின் மிக முக்கியத் தொகுதியான சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. தமிமுன் அன்சாரி அவர்கள் திமுக-வின் 'உதயசூரியன்' சின்னத்தில் இப்போட்டியில் களம் காண்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு இடையே அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் மஜக-வுக்கு ஒரு தொகுதி: தமிமுன் அன்சாரி அளித்த 5 தொகுதிகள் விருப்பப்பட்டியல்!

திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்து எஸ்டிபிஐ (SDPI), முக்குலத்தோர் புலிப்படை, தமிழக தேசம் கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அனைவரும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டியிடுவது அத்தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் கூட்டணி வாக்குகளை ஒருங்கிணைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிமுன் அன்சாரி, தற்போது மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையத் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இத்தொகுதியில் இவரை எதிர்த்து அதிமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: திமுக கூட்டணி அதிரடி: எஸ்.டி.பி.ஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!