தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மறைந்திருந்த நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்சேவல் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரது மனைவி சுப்புத்தாய் , இருவரும் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு பச்சரிக்கு திரும்பியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இருவரையும் ஊருக்கு அருகே உள்ள பாலத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து தடுத்து நிறுத்தியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்த மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சங்கரலிங்கம் உயிரிழந்த நிலையில், மனைவி சுப்புத்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்பு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் திக்..திக்....!! பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற 5 காவலர்களுக்கு விடிய, விடிய காத்திருந்த அதிர்ச்சி...!
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக உறவினர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கணவன் மனைவி இருவரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!