சென்னை: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களில் மொத்தம் 1,801.27 கி.மீ. நீளத்துக்கு சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையின்போது அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி விவசாயிகள் பாசன அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமூர்த்தி அணை பாசனத்தை சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நம்பியுள்ளதாகவும், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் இருந்தால் வறட்சி மற்றும் குறைந்த மழைப்பொழிவு காலங்களில் கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என அவர் கூறியுள்ளார். மேலும், நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தூர்வாரும் பணிகளை தொடங்கி முடிக்க குறைந்தபட்சம் ஒரு மாத காலம் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, திருமூர்த்தி அணை பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!