மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இடைத்தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நாளை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.சென்னையில் வடசென்னை பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் கட்சி எந்த நிலையை எடுக்குமென்பது குறித்து கட்சி உறுப்பினர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் மாநிலக் குழுவில் முழுமையான கலந்துரையாடல் நடத்தி முடிவு செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.தற்போதைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது போன்ற விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கட்சியின் கொள்கைகளையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்பதை பெ.சண்முகம் வலியுறுத்தினார். நாளை நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்று விவாதிப்பார்கள். அதன் அடிப்படையில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.இடைத்தேர்தல் விவகாரம் மட்டுமல்லாமல் பிற முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார். புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரத்தில் அவசர அவசரமாக முடிவெடுக்கக் கூடாது என்று அரசுக்கு அறிவுறுத்தினார். பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு ஒருமித்த முடிவுக்கு வர அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்தப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கோரினார். மீனவர்களின் எதிர்ப்புகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இடைத் தேர்தல்... தவெக பணிக்குழு அமைப்பு..! முதல்வர் விஜய் அறிவிப்பு.!!
கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போதைப் பொருள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டி, அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் தேவை என்று கூறினார். ஆம்னி பேருந்துகளில் அபரிமிதமான கட்டண உயர்வு நடைபெறுவதைக் கண்டித்து, அரசு உடனடியாகத் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!