மாணவர்களின் தலைமைத்துவ திறன், ஒழுக்க உணர்வு மற்றும் கல்வித் திறமையை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘மாணவ தலைமை ஆசிரியர்’ என்ற இந்த திட்டத்தின்கீழ் ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவைச் சேர்ந்த கோகுல்ராஜ் மற்றும் ஹர்ஷந்த் ஆகிய இரு மாணவர்கள் ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்று பள்ளியின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.
இந்தத் திட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில், “எங்கள் பள்ளியில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இந்தப் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு முறை தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுவார்கள். இது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும் தலைமைப் பண்புகளையும் வளர்க்க உதவும்” என்றனர்.
பள்ளி மைதானத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தும் விவகாரத்தில் மாணவர்கள் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளனர். காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை மட்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் 8:30 மணி வரை மைதானத்தில் தங்கியிருப்பதால் மாணவர்களின் காலை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, குறித்த நேரத்திற்குள் பொதுமக்கள் வெளியேறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

மேலும், இன்றைய இளம் வயது மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக போதைப்பழக்கங்களுக்கு ஆளாகும் அபாயத்தைத் தடுக்க, வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ‘மாஸ் டிரில்’ (கூட்டு உடற்பயிற்சி) நடத்த வேண்டும் என்றும், கல்விக்கு இணையான முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எதிர்காலத்தில் தொழில்நுட்ப அறிவு அவசியம் என்பதால், கணினி கையாளுதல் மற்றும் அதன் அடிப்படை அம்சங்கள் குறித்த பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதும் அவர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை.
இன்று தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்ற மாணவர்கள் வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித வாய்ப்பாடுகளில் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டறிந்தனர். இருப்பினும், சில மாணவர்கள் இந்தப் பாடங்களில் சிரமப்படுவதையும் அவர்கள் கவனித்தனர். இதனைச் சரிசெய்யும் வகையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 1:00 மணி முதல் 1:20 மணி வரை வகுப்புத் தலைவர்கள் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் பயிற்சி, 2 முதல் 16 வரையிலான வாய்ப்பாடுகளை தினசரி திரும்பத் திரும்பப் பயிற்றுவிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தைரியமாக முன்வைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எழுப்பினர். மாணவர்களின் இந்தப் பொறுப்புணர்வும் தலைமைப் பண்பும் பள்ளியின் மற்ற மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது. இத்தகைய புதுமையான முயற்சிகள் மாணவர்களை சிறந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் என பள்ளி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மாற்றம் வரும் என்று நம்பிய பெண்களுக்கு ஏமாற்றம்! தவெக அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!