தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2026 மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை, மாநிலம் முழுவதும் 3,412 மையங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வை 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்த மதிப்பீட்டு பணியில் பங்கேற்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்ததாலும், புதிய அரசு அமைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவலும் பரவியது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளம், எஸ்.எம்.எஸ். மற்றும் பள்ளிகளில் நேரடியாக சென்று அறிந்து கொள்ளும் முறைகள் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதல் முறையாக 12ம் வகுப்பு மாணவர்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘HI’ என்று குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் வாட்ஸ்அப்பிற்கு வரும்.
இதையும் படிங்க: மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!
தேர்வர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ் டூ துணைத் தேர்வெழுத வேண்டியிருக்கும். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த ஆண்டு, ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூலை 25-ல் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் - ஆளுநர் அர்லேகர் அதிரடி!