தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை வேட்பாளர்களின் பிள்ளைகள் தீவிர பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளனர். பொதுவாக பெரியவர்களும் தலைவர்களும் மட்டுமே பிரசாரம் செய்யும் வழக்கத்துக்கு மாறாக, பல வேட்பாளர்கள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இந்த புதிய போக்குக்கு முதல் உதாரணம் மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். அவர் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் தனது மகளையும் அழைத்துச் சென்று பேச வைத்தார். வெயிலில் காய்ந்தபடி தந்தைக்காக மகள் பிரசாரம் செய்யும் காட்சி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவும்யா தனது இரு மகள்களையும் களத்தில் இறக்கியுள்ளார். இரு சிறுமிகளும் வீடு வீடாகச் சென்று தாய்க்காக தீவிரமாக வாக்கு கேட்டு வருகின்றனர். கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகன் தாய்க்குப் பதிலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பறக்கும் படைக்கிட்ட சிக்காம பணப்பட்டுவாடா செய்வது எப்படி? அரசியல் மகளிருக்கு ஸ்பெஷல் டிரெய்னிங் !!

திருச்சி லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸின் மகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியின் மகன் மற்றும் மகள் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு கேட்டு வருகின்றனர். காட்பாடி தொகுதி அமைச்சர் துரைமுருகனின் மருமகளும் மாமனாருக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த உத்திக்கு முக்கிய காரணம், இளைஞர்கள் வாக்குகளை கவர்வதுதான். 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் சென்று பேசும்போது, அவர்களே பிரசாரம் செய்தால் எளிதில் தங்களை பொருத்திக்கொள்வார்கள் என வேட்பாளர்கள் நம்புகின்றனர். மேலும், தேர்தல் செலவு மற்றும் வரவு கணக்குகளை தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்துள்ளனர். வெளியாட்களை நம்ப விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் மூலம் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் மறைமுகமாக உருவாகி வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தந்தைக்காக மகள், தாய்க்காக மகன், மாமனாருக்காக மருமகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளது இந்த தேர்தலின் தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!