தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) 2012ஆம் ஆண்டு உதவிப் பொறியாளர்களாகப் பணியில் சேர்ந்த 700 பேருக்கு உதவிச் செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி உயர்வாகக் கருதப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பதவியேற்ற பிறகு, மின் வாரியத்தில் முதற்கட்டமாக சுமார் 300 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அந்தப் பட்டியல் முந்தைய திமுக ஆட்சியின் போதே தயாரிக்கப்பட்டிருந்ததாக திமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர். இப்போது இரண்டாவது கட்டமாக உதவிப் பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற 700 பேருக்கும் காலியாக உள்ள உதவிச் செயற்பொறியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். மேலும், அவர்கள் விரும்பும் இடங்களில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அலுவல் கோப்புகளில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விரைவில் கையொப்பமிடவுள்ளார். பதவி உயர்வு ஆணைகளை முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மின்வாரிய பொறியாளர்களுக்கு ஜாக்பாட்..! அதிரடி புரமோஷன்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

இதற்கு இணையாக, மின் வாரியத்தில் பணியாற்றும் 200 உதவிச் செயற்பொறியாளர்களுக்குப் பணியிட மாறுதல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் 20 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்தின்படி மூன்று இடங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் முறையில், எந்தவித சிபாரிசும் இன்றி, காலியிடங்கள் உள்ள இடங்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளன. 2012ஆம் ஆண்டு சேர்ந்த உதவிப் பொறியாளர்கள் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தனர். புதிய அரசின் கீழ் இரண்டு கட்டங்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதால், மின் வாரியத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் மாறுதல் ஆணைகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் ரத்து..! மின்வாரியம் புதிய நடவடிக்கை..!!