சென்னை: முதல்வர் விஜய் மற்றும் திமுக இடையே தீவிரமடைந்துள்ள மிசா கைது விவகாரம், தற்போது இடைத்தேர்தல் பிரசாரக் களத்துக்கும் நகரும் சூழல் உருவாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மையமாக வைத்து, ‘தி மிசா மார்க்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை திமுக இளைஞரணி சார்பில் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1975-ல் நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டபோது, மிசா எனப்படும் உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1977 வரை நீடித்த இந்த காலகட்டத்தில், அப்போது இளைஞரணியில் இருந்த மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டதாக திமுக தொடர்ந்து கூறி வருகிறது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் மிசா விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேசியது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக ஸ்டாலினின் மிசா கைது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதுடன், விஜயின் பேச்சும் திமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவசரநிலை காலத்தில் தான் சந்தித்த சிறை அனுபவங்களையும் தாக்குதல் குறித்த தனது நினைவுகளையும் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA! அமைச்சர் ரமேஷ் சரமாரி குற்றச்சாட்டு!

இதையடுத்து, ஸ்டாலினின் மிசா கைது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆவணம் குறித்து கேள்வி எழுப்பி, தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் விமர்சனம் முன்வைத்துள்ளனர். அதேவேளை, திமுக தரப்பும் ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை வரலாற்று நிகழ்வாக முன்வைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் மோதலின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன.
இந்த தேர்தல் பிரசாரத்தில் மிசா விவகாரத்தை முக்கிய பிரச்சாரப் பொருளாக பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகளை உள்ளடக்கியதாக கூறப்படும் ‘தி மிசா மார்க்’ குறும்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் இந்த குறும்படம் தேர்தல் பிரசாரத்திலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மிசா கைது தொடர்பாக ஆளும் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் இதனை வெளியிடும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிசா விவகாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் மேலும் முக்கிய அரசியல் விவாதமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!