சென்னை: தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நேற்று தேர்வு நடத்தியது. மாநிலம் முழுவதும் நடந்த இத்தேர்வில் கோவையில் மட்டும் 4,745 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 3,996 பேர் கலந்துகொண்டு எழுதினர்.
தேர்வு இரு தாள்களாக நடைபெற்றது. காலை அமர்வில் தாள்-1 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரமும், மதிய அமர்வில் தாள்-2 50 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரமும் நடந்தது. தாள்-1ல் பல கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக தாள்-2ல் ஐந்து கேள்விகளில் ஒன்றை தேர்வு செய்து கட்டுரை வடிவில் பதில் எழுத வேண்டியிருந்தது. அதில் மூன்றாவது கேள்வி திமுக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விட்டாச்சு லீவு! அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!
'இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் விளக்கம் மற்றும் அதன் தாக்கம்' குறித்து எழுத வேண்டும் என்று கேள்வி இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு திட்டத்துக்கும் 10 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 50 மதிப்பெண்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆங்கிலப் பிரிவில் தேர்வு எழுதிய ஒரு தேர்வர் கூறுகையில், “தாள்-1 கேள்விகள் மிகக் கடினமாக இருந்தன. தாள்-2ல் அரசின் ஐந்து திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டிருந்ததால் பலரும் அதை எதிர்கொண்டோம். ஒரு திட்டத்துக்கு 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் எளிதாக எழுத முடிந்தது. ஆனால் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் இத்தகைய கேள்விகள் ஏன் வர வேண்டும் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது” என்றார்.
தேர்வர்கள் பலரும் தாள்-2ல் அரசு திட்டங்கள் கேட்கப்பட்டது அரசியல் தலையீடு போல தோன்றுவதாகவும், உதவி பேராசிரியர் பணிக்கு பாடத்திட்டம் சார்ந்த கேள்விகளே வர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தந்தைக்கு சிலை வைக்கிறதா? பள்ளி கட்டிடங்களா? எது முக்கியம் ஸ்டாலின்? அண்ணாமலை கேள்வி