தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், சில இடங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதனங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சென்னை மட்டுமின்றி திருநெல்வேலி, திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பொதுமக்கள் மின்வெட்டுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் தேவை ஏன் திடீரென அதிகரித்தது?
தமிழகத்தின் மின்தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு உச்ச மின்தேவை சுமார் 16,000 முதல் 17,000 மெகாவாட் என்ற அளவில் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது சுமார் 19,000 முதல் 20,500 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாநிலத்தின் உச்ச மின்தேவை 21,000 மெகாவாட்டையும் கடந்துள்ளது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே...!! - தாராபுரத்தில் திடீர் மின்வெட்டு... ஸ்தம்பித்த வாக்குப்பதிவு...!
சென்னையிலும் மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் சென்னை நகரின் மின்தேவை 3,500 முதல் 3,800 மெகாவாட் அளவில் இருக்கும் நிலையில், தற்போது 4,200 முதல் 4,500 மெகாவாட் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சார உற்பத்தி குறைவு:
மின்தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றான காற்றாலை மின்சார உற்பத்தியும் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 1,500 மெகாவாட் அளவுக்கு குறைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்றின் வேகம் குறையும் காலகட்டம் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி குறைவது வழக்கமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு மின் தேவை அதிகமாக இருந்ததால் அதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு:
சமீப நாட்களாக மின் தேவை அதிகரித்து வருவதன் காரணமாக, முதலில் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில், 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
இதன்படி, வரும் 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், உச்ச நேரமான மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3,000 மெகாவாட் மின்சாரத்தையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையாக இருக்கும் 1,200 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதன் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையாக, மின்சார வாரியம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கான டெண்டரும் தற்போது கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!