தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம் நாளை முடிவடைய உள்ள நிலையில், திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொண்டார்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட முக்கியப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்த கமல்ஹாசன் கல்வித் துறையில் அன்பில் மகேஸின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிய கமல்ஹாசன்: பள்ளி கல்வித் துறையில் நான் கனவு கண்ட பல புரட்சிகரமான கல்வித் திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. தகுதியான ஒரு இளைஞரைத் திருவெறும்பூர் மக்கள் மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகளைக் கமல்ஹாசன் கடுமையாகச் சாடினார். தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து, அதன் மூலம் இந்தியைத் திணிக்க முயலும் தர்மேந்திர பிரதானின் செயல் கண்டிக்கத்தக்கது. லாப நஷ்டம் பார்க்கும் ஒரு சாதாரண வியாபாரி கூட இத்தகைய தரக்குறைவான செயலில் ஈடுபடமாட்டார். மொழியைத் திணிக்கக் கல்வியைப் பகடைக்காயாக மாற்றுவது முறையல்ல என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!
மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருவது குறித்துப் பேசிய அவர் இது பதவிக்கான கூட்டணி அல்ல; தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கான கூட்டணி. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்தார். திருவெறும்பூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் அன்பில் மகேஸுக்காக "உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்குக் கேட்டு கமல்ஹாசன் நடத்திய இந்தப் பரப்புரை, அந்தத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!