தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான விற்பனைக்குரிய வீடு மற்றும் மனைகளை இணையதளம் மூலம் எளிதில் வாங்கும் வகையில் புதிய இணையவழி விற்பனைத் தளத்தை (Online Allotment Portal) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் இன்று (12.08.2026) சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற இத்தொடக்க விழாவில், வாரியத்தின் தலைவர் வே.சிவா, அரசு முதன்மைச் செயலாளர் இரா.கிர்லோஷ் குமார், மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு மின்னனு முறையில் 2,630 அலகுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குத் தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ் விற்பனைக்கு உள்ள 7,659 குடியிருப்பு அலகுகள் இணைய வழியில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் 2,842 அலகுகளுக்குக் குலுக்கல் முறையிலும் (21.08.2026 முதல்), 2,184 அலகுகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும் (24.08.2026 முதல்), 1,749 அலகுகளுக்குப் பொது ஒதுக்கீடு முறையிலும் (25.08.2026 முதல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள எந்தவொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் விலை உயர்வு ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!
விற்பனைக்குத் தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள், பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) 'e-Tender cum e-Auction' முறையில் மின் ஏலம் விடப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் 25.08.2026 முதல் 24.09.2026 வரை 'Tamil Nadu e-Tenders Portal' மூலம் பெறப்படும். விண்ணப்பப் பதிவேற்றத்திற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்வதுடன் தேவையான ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இந்த வெளிப்படையான இணையவழிச் செயல்பாட்டின் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றித் தங்களுக்குத் தேவையான வீடு மற்றும் மனைகளை எளிதில் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!