தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், புதிதாக தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் மூலம் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதிகளவில் புதிய முகங்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் பலர் முதல்முறையாக மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்றிருப்பதால், சட்டமன்றத்தின் செயல்முறைகள் குறித்து தெளிவான புரிதலை வழங்க இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 50 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தடம் பதித்த திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இரண்டு கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும், பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி என புதிதாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கற்றுத்தர தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய திட்டமிட்டுள்ளதால் தவெக எம்.எல்.ஏ.க்கள் சிறப்பாகவும், கண்ணியத்துடனும் செயல்படுவதை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் இந்த ஏற்பாட்டை செய்ய உத்தரவிட்டுள்ளாராம்.
இதையும் படிங்க: ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், சட்டப்பேரவையின் விதிமுறைகள், உறுப்பினர்களின் கடமைகள், கேள்வி நேரத்தில் பங்கேற்பது, பொதுமக்கள் பிரச்சினைகளை பேரவையில் முன்வைப்பது, தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
மேலும், நிதிநிலை அறிக்கை விவாதங்கள், அரசின் கவனத்திற்கு தொகுதி பிரச்சினைகளை கொண்டு செல்வது, பேரவை மரபுகளை மதித்து செயல்படுவது போன்ற விஷயங்களும் பயிற்சியின் முக்கிய பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
இந்த சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால், அவர்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள் குறித்த முழுமையான அறிவை வழங்குவது அவசியம் என கருதி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!