வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் கழிவறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடத்தின் போட்டோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 பேர் மீதும் கடந்த 2022ம் ஆண்டு கஞ்சா செடி வளர்த்ததாக வனத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமின் பெற்ற மாரிமுத்து வனத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நேரடியாக வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இதில் மற்ற 5 பேரும் வனத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

இதனால் மாரிமுத்து மீது வனத்துறை அதிகாரிகள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் தொல்லை தாங்க முடியாமல் கேரளா மூணார் அடுத்த சூரியநெல்லி செட்டில்மென்ட் பகுதிக்கு சென்று அங்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 29 ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து கஞ்சா செடி வளர்த்த வழக்கில் இருந்து 6 பேரையும் விடுவித்துள்ளது.
இதையும் படிங்க: “ஆட்சி மாறாது, காட்சி மாறும்”... ஓபிஎஸ் - ஸ்டாலின் சந்திப்பால் ஓவர் குஷியான செல்வப்பெருந்தகை...!
இதில் கையெழுத்திட 30ம் தேதி உடுமலைக்கு மாரிமுத்து வந்துள்ளார். அங்கு வழக்கறிஞரை சந்தித்து விட்டு சென்ற நிலையில் இவர் சிறுத்தை பல் வைத்திருந்ததாக கேரளா வனத்துறையினர் கைது செய்து, தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்ததாகவும் அதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாள் காலை கழிவறை செல்லும் போது மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கஸ்டடி மரணம் பதிவு செய்யப்பட்டு உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நித்யகலா விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் நீதிபதி முன்னிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு சோதனை நடைபெற்று வருகிறது. முழு உடற்கூறாய்வு சோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கழிவறை மற்றும் அவரது லூங்கி ஷவரில் மாட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ளது போல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை எனவும் வனத்துறையினர் மாரிமுத்து மீது வஞ்சம் வைத்து தாக்கி கொலை செய்ததாக செட்டில்மென்ட் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விரைவில் மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு... திமுக அமைச்சர் சொன்ன அசத்தலான குட்நியூஸ்...!