அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். "ஒரு பொழுதுபோக்குக்காகக் கூட அந்த தீவை தாக்கினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்று கிண்டலாகவும் பேசியுள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்க் தீவு ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய தீவு. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேல் இத்தீவு வழியாகவே நடைபெறுகிறது. இது ஈரானின் பொருளாதாரத்திற்கு ஆணிவேராக விளங்குகிறது.
மேலும், இங்கு ஈரானிய கடற்படை தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையை கண்காணிக்கும் ராணுவ மையமாகவும் இது செயல்படுகிறது.
இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!
கடந்த மார்ச் 13ஆம் தேதி அமெரிக்கா கார்க் தீவு மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தியது. டிரம்ப் இதை உறுதிப்படுத்தி, "மத்திய கிழக்கு வரலாற்றில் மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சு" என்று விவரித்தார்.

இதில் 90க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் – கடற்படை கண்ணி வெடி சேமிப்பு மையங்கள், ஏவுகணை பதுங்கு குழிகள், ராணுவ விமான நிலையங்கள் – முற்றிலும் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், எண்ணெய் உள்கட்டமைப்புகளை வேண்டுமென்றே தாக்கவில்லை என்றும், "மனிதாபிமான காரணங்களுக்காக" என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க நட்பு நாடுகளுக்கு போர் கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். "கார்க் தீவின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. தாக்குதல் மேலும் தீவிரமாகலாம். பொழுதுபோக்குக்காகவே கூட தாக்குவோம்" என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருந்தாலும், நிபந்தனைகள் இன்னும் இறுதியாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த மிரட்டல் எண்ணெய் விலையை ஏற்றி, உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ஈரான் தரப்பில் பதிலடி தாக்குதல்கள் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் போர் மேலும் விரிவடையும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!