அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ளார். அதே நேரத்தில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்தகட்டமாக அமெரிக்கா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரான் தொடர்பாக தான் தற்போது முக்கியமான முடிவெடுக்கும் நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், விரைவில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடைபெறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பையும் டிரம்ப் முற்றிலும் நிராகரிக்கவில்லை. ஈரான் அதிபரை சந்திப்பது குறித்து அவர் திறந்த மனநிலையுடன் இருப்பதாகவும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

மறுபுறம், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. போர் நடவடிக்கைகளுக்கு முடிவு, முடக்கப்பட்ட நிதியை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பு தனது நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் மோதல் ஏற்கனவே ஆறு மாதங்களைக் கடந்து, தற்போது ஏழாவது மாதத்தில் நீடித்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கின் பாதுகாப்பு மட்டுமின்றி, செங்கடல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் டிரம்பின் புதிய எச்சரிக்கையும், மறுபுறம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பும் ஒன்றாக வெளியாகியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்தகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது ராணுவ பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!