அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் பயங்கரமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், கத்தார் உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் பெரிதாக எழுந்துள்ளது.
இதற்கு மேலாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. “எதிரிகளின் கப்பல்கள் வழியே செல்ல முயன்றால் வீழ்த்தப்படும்” என ஈரான் உறுதியாக எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கையால் உலக எண்ணெய் சந்தை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: ஈரான் எண்ணெய்யை விற்க 30 நாட்களுக்கு அனுமதி!! விலையேற்றத்தை கட்டுப்பட்டுத்த இறங்கி வந்த அமெரிக்கா!
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஈரான் அதை பொருட்படுத்தவில்லை என்று கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என மிரட்டல் விடுத்திருந்தார்.

ஆனால் திடீரென யு-டர்ன் அடித்த டிரம்ப், “ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், மின் நிலையங்கள் மீதான தாக்குதல் திட்டத்தை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறோம்” என அறிவித்தார். இந்த இடைவேளை போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு ஈரான் உடனடியாக பதிலளித்தது. “அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. டிரம்ப் சந்தைக்கு ஆதரவாக பொய் பரப்புகிறார்” என ஈரான் தரப்பு தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில், ஈரான் அரசு ஊடகங்கள் இஸ்பஹான் நகரில் உள்ள எல்பிஜி நிர்வாகக் கட்டிடமும், கோர்ரம்ஷஹர் நகரில் உள்ள எரிவாயு குழாய்களும் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், ஈரான் உச்ச தலைவரின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி கடும் எச்சரிக்கை விடுத்தார். “போரில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். எங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும். அமெரிக்கா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடாது என உத்தரவாதம் தர வேண்டும். இவை நிறைவேறும் வரை போர் தொடரும்” என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில், “ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும். ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக நசுக்குவோம். லெபனான் ஹிஸ்புல்லா மீதும் தாக்குதல் தொடரும்” என உறுதியாகக் கூறினார்.
உலக நாடுகள் இந்த நெருக்கடியை உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், போர் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போரை முடிச்சுக்கலாமானு பரிசீலிக்கிறேன்!! ராணுவ நடவடிக்கையும் குறைக்கலாம்! அதிபர் ட்ரம்ப் சூசகம்!