தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் தொடரும் நிலையில், மதுரைக்கு திட்டத் தொடக்க விழாக்களில் பங்கேற்க வந்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அருகிலுள்ள கடமலைக்குண்டுவுக்குச் சென்று மக்களை சந்திக்காதது அவர்களிடையே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 4,600 குடும்பங்கள் சுமார் 5,072 ஹெக்டேர் நிலத்தில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்கள் பல தலைமுறைகளாக பட்டு மரம், முந்திரி, மிளகு, ஏலக்காய் போன்ற பயிர்களை பயிரிட்டு வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் பட்டா வழங்கி நிலம், வீடு, தொழிலைப் பாதுகாக்க வேண்டும் எனவும், அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!
கடமலைக்குண்டு உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், வெளியேற்ற நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது. மதுரையிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்திலேயே உள்ள கடமலைக்குண்டுவுக்கு முதலமைச்சர் சென்று மக்களை சந்திக்காமல் தவிர்த்திருப்பது, “அரசு எங்களை கைவிட்டுவிடுமோ” என்ற அச்சத்தையும் பதற்றத்தையும் அம்மக்களிடையே அதிகரித்துள்ளதாக தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழ்நாடு தான் என் வீடு, எட்டு கோடி மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்” என வீரவசனம் பேசிய முதலமைச்சர், வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களுக்குச் செய்யும் நன்றிக் கடன் இதுதானா என மக்கள் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் கடமலைக்குண்டுவுக்குச் சென்று போராட்ட மக்களை சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும், நாளை நீதிமன்றத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையிலான வாதங்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
வனப் பாதுகாப்பும் மக்கள் உரிமைகளும் இணைந்து செல்ல வேண்டிய இந்தப் பிரச்சினையில், அரசின் உடனடி தலையீடு அவசியம் என்பதே அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ‘தவெக அல்ல.. தற்குறி வெற்றிக் கழகம்!’ விளாசிய டிடிவி தினகரன்.. பரபரப்பை கிளப்பிய பேச்சு!!