மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசியலில் தற்போது நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மிக முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தினகரன் கூறியதாவது: "தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணிக்கு நான் வர வேண்டும் என்று செங்கோட்டையன் விரும்பினார். அதை நான் மறுக்க முடியாமல் தயக்கத்தில் இருந்தேன். 'பார்ப்போம்' என்று கூறியிருந்தேன். நான் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்று செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார்."
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்கு சென்றேன். எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தர முடியாது. செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்று பேசினார். ஆனால் நான் அதிமுக கூட்டணியில் சேருவதாக அவரிடம் தெளிவாகக் கூறினேன். அது எனக்கு சரிவராது என்று அவர் சொன்னார்" என்றார்.
இதையும் படிங்க: படர் தாமரை உடலுக்கு நாசம்! பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்! இபிஎஸ் - டிடிவி-யை வச்சு செய்யும் கருணாஸ்!
திமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, தினகரன் கடுமையாக பதிலளித்தார். "திமுக எப்படி எங்களுக்கு சரிவரும்? அதிமுகவால், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி திமுகவுக்கு போவார்? என்னால் ஒருபோதும் திமுகவுக்கு போக முடியாது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு" என்று உறுதியாகக் கூறினார்.

சகோதரர்கள் சண்டையிட்டு பிரிவதும் சேர்வதும் இயல்பு என்று குறிப்பிட்ட தினகரன், "கட்சியும் குடும்பம் மாதிரிதான். எங்களை பார்ப்பவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறுகின்றனர். கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே. நிபந்தனை இல்லை. நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் நிலவி வருகிறது" என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மேலும் சிலர் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புவதாகவும் தினகரன் தெரிவித்தார். "எங்களை சந்திக்கும் பொதுமக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறி வருகின்றனர். கூட்டணியில் நாங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தான் வைப்போம் என்று அவர்களுக்குத் தெரியும். அதிமுக, அமமுக தொண்டர்கள் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.
தற்போது அதிமுக - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் இந்த பேச்சு தவெக - அதிமுக இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணி மேலும் வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்துவிட்டது?! தேஜ கூட்டணியில் இணைய டிடிவி அழைப்பு! தேர்தல் சடுகுடு!