ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, 25லட்ச ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல்களை குறிப்பிட்டு உள்ளார்.

கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,700 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதில் பாதியளவு கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அதிகாரப்போக்கே, பாடம் கற்பிக்கும் பணியைப் புறக்கணித்துப் போராடும் அளவிற்கான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: ”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களும் பயனளிக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேறுவழியின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தந்திட வேண்டும் என ttv தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மோதல்..! சசிகலாவை சந்தித்த அமமுக நிர்வாகி... கட்சியை விட்டே நீக்கிய TTV தினகரன்..!