தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற இந்த பேராலயம், தமிழகத்தின் முக்கிய கிறிஸ்தவ ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1713-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், 1982-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் பேராலய அந்தஸ்து பெற்றது. ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 5 வரை 11 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் அதிகாலை 4:30 மணிக்கு ஜெபமாலையுடன் விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு நடந்த சிறப்பு கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஆயர் ஸ்டீபன் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றம் செய்தார்.
இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அப்போது அங்கு கூடியுருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் 'மரியே வாழ்க' என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். பின்னர் சமாதானச் சின்னமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு, முன்னாள் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கப்பட்டது.

விழாவில், தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்டு 5-ல் சப்பர பவனியுடன் விழா நிறைவடைகிறது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரத்தின் துண்டு மற்றும் அன்னை மரியாளின் திருத்தலை முடி பாதுகாக்கப்படுகின்றன. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாக இது விளங்குகிறது. மேலும் தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழா, ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை.. ஜூலை 31ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!