தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான சத்தியபாமாவை குறிப்பிட்டு அவர் பேசிய வார்த்தைகள் உருவகேலியாகவும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்ததாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சத்தியபாமாவைப் பற்றி மக்கள் எவ்வாறு அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
“பெட்டி பாமா” என்றும் “பல்டி பாமா” என்றும் அழைக்கப்படுவதாகக் கூறிய அவர், அந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் பேசினார். இந்த வார்த்தைகள் சத்தியபாமாவின் உடல் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முன்பே திமுக தரப்பில் அவரை “பெட்டி பாமா” என்று குறிப்பிட்டு, கட்சி மாற்றத்திற்கு பணம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், இந்தப் பேச்சு மேலும் விமர்சனங்களைத் தூண்டியது.

இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் வந்தன. கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய் உட்பட பல அமைச்சர்களும் ஸ்டாலினின் பேச்சை அநாகரிகமானது என்றும், பெண் வேட்பாளரை உருவகேலி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும், மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சத்தியபாமா முன்னதாக அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து போட்டியிடுவதால் ஏற்பட்ட இடைத்தேர்தல் சூழலில் இந்த சர்ச்சை கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா? மதுராந்தகத்தில் திமுகவை விளாசிய துரை வைகோ!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நாங்கள் அருகில் இருக்கும் வரை தமிழக முன்னாள் முதல்வர் மிகுந்த கண்ணியத்துடனும் சிறந்த அரசியலும் பேசிவந்தார். நாங்கள் அருகில் இல்லாத காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை, தடம் புரண்டு பேசுகிறார். ஆனால் உருவகேலி ஏற்புடையது அல்ல. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் தோன்றிய இயக்கம் அது. எனவே பெண்களை இழிவு செய்வதை ஏற்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!