துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த பிளைதுபாய் (FlyDubai) பயணிகள் விமானத்தை நடுவானில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் அல்லது பாலைவனப் பகுதியில் மோதி தகர்க்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) என்பவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
174 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 182 பேருடன் சென்ற போயிங் 737 ரக பிளைதுபாய் விமானம் பறந்து கொண்டிருந்த போது, 29 வயதான துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, காக்பிட்டில் இருந்த எமர்ஜென்சி கோடாரியைக் கொண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மீது திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்.
படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் துணிச்சலுடன் போராடி காக்பிட் கதவைத் திறக்க, அங்கிருந்த பயணிகள் மற்றும் பிற விமானப் பணியாளர்கள் உடனடியாக உள்ளே புகுந்து துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டினர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!
இந்த களேபரத்திற்கு நடுவே ஆட்டோ-பைலட் அமைப்பை அணைத்து விமானத்தை அதலபாதாளத்தை நோக்கிச் செங்குத்தாக இறக்கி மோதச் செய்ய அந்தத் துணை விமானி தீவிர முயற்சி செய்துள்ளார். சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட அவர், தற்போது தீவிர விசாரணைக்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், மரணத்திற்குத் தான் அஞ்சவில்லை என்றும், விமானத்தை மோதி அழிக்கவே திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தீவிரவாத அமைப்புகளின் இணையதளங்களைத் தொடர்ந்து பார்வையிட்ட காரணத்தால், முன்னதாக ஓமன் ஏர் (Oman Air) நிறுவனத்திலிருந்து அவர் விமானம் ஓட்டுவதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டவர் என்பதும், முறையான பாதுகாப்பு சரிபார்ப்புகளின் இடைவெளியைப் பயன்படுத்தி பிளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பயணிகள் விமானத்தைக் கடத்தி பேரழிவை ஏற்படுத்த முயன்ற இந்தச் சம்பவத்தை ஒரு அப்பட்டமான பயங்கரவாதத் தாக்குதல் (Terrorist Attack) என ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதுடன், அவருக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை (Death Penalty) பெற்றுத்தர அந்நாட்டு சட்டத்துறை தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதையும் படிங்க: 20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!