தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில், தகுதியான வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலைத் தவெக தலைமை ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி முதல் வாரத்தில் சேலத்தில் பிரம்மாண்டமானப் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ள விஜய், அதே மேடையில் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் அதிகளவில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டுள்ள 'விசில்' சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிக்கத் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: "மூன்றாம் ஆண்டில் தவெக!" - பிப்ரவரி 2-ல் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பட்டியல் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ராயப்பேட்டை கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் முழங்கியது போல, "சென்னையிலிருந்து மாற்றம் தொடங்கும்" என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு அமைந்துள்ளனவா என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஜனநாயகன்” பட சென்சார் வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு!