தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியை, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய், 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கினார்.
தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக மக்களின் நலனுக்காகவும், ஊழலற்ற, நவீன தமிழ்நாட்டை உருவாக்குவதற்காகவும் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தனிக்கட்சி... தவெகவுடன் கூட்டணி... ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்!
இதற்காக 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக மேலும் 217 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, இது மாநாட்டின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.

மதுரை, தமிழக அரசியல் களத்தில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பல அரசியல் கட்சிகளின் முக்கிய மாநாடுகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகள் மதுரையை மையமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கம். இந்தப் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மதுரையின் அரசியல் முக்கியத்துவத்துடன், விஜய்யின் மாநாடு இப்பகுதியில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமில்லாமல் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சென்டிமெண்டாக அந்த தேதியை விஜய் தேர்வு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மதுரையில் வரும் 25ஆம் தேதி மாநாடு நடத்துவதில் விக்கல் ஏற்பட்டுள்ளது. மாநாட்டை 25ஆம் தேதிக்கு பதிலாக 21ஆம் தேதி நடத்த போலீசார் தமிழக வெற்றி கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றாக 21ஆம் தேதி மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நம்ம கூட மக்கள் இருக்காங்க.. இதுக்கு மேல என்ன வேணும்? மனம் திறந்த தவெக தலைவர் விஜய்..!