நயினார் நாகேந்திரனுக்குப் பொது அறிவும் இல்லை, அரசியல் அறிவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு கட்சியின் தலைமையிலிருந்து கொண்டு பொதுவெளியில் நாகரீகமில்லாமல் பேசி வருவதாகச் சாடினார். திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும் என்று நயினார் கூறிய கருத்திற்குப் பதிலளித்த நிர்மல் குமார், என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் கேவலமான முறையில் விமர்சிப்பவர்கள் இந்தத் தேர்தலில் நிச்சயம் படுதோல்வி அடைவார்கள் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
சேலத்தில் சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் சூரஜ் என்ற இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவத்திற்கு நிர்மல் குமார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ஏற்கனவே உடல்நலக் குறைவுடன் இருந்த அந்த இளைஞருக்கு, கூட்ட வளாகத்திலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி செய்யும் என்று உறுதியளித்தார். மேலும், செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், இனி வரும் காலங்களில் இது போன்ற அசவுகரியமான சூழல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய நிர்மல் குமார், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 200 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் உரியப் பங்கு வழங்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் விமர்சிப்பதாகவும், மக்களின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான த.வெ.க. மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
இதையும் படிங்க: “மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி மாநாடு!” சேலத்தில் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!