கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் விபத்து தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று இரண்டாவது முறையாக டெல்லி அலுவலகத்தில் ஆஜராகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், தேசத்தையே உலுக்கியது. இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. தனது விசாரணையை தற்போது அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தக் கொடூர விபத்து தொடர்பாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 'கிரில்' (Grill) பாணியில் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி முதல்முறையாக டெல்லி ஆஜரான விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டது. "நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார்? கூட்ட நெரிசல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் தோல்வியடைந்தன?" என அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
இதையும் படிங்க: சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும் விஜய்: இன்று மாலை தனி விமானத்தில் டெல்லி பயணம்!
முதற்கட்ட விசாரணை திருப்தி அளிக்காத சூழலில், பொங்கல் விடுமுறை முடிந்த கையோடு இன்றைய தினமே (ஜனவரி 19) மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக நேற்று மாலை 4 மணிக்கே தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த விஜய், இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகிறார். இன்றைய விசாரணையில், கடந்த முறை அளித்த பதில்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நிர்வாகிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த ஆஜர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!