தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் முறையாக இதுவரைக்கும் பொறுப்புகள் அறிவிக்கப்படமால் உள்ளது. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி தொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த சுமங்கலி ராஜா என்பவர் தலைமையிலான அணியினருக்கும், சுரேஷ் என்பவர் தலைமையிலான அணியினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
இருதரப்பினரும் வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருவருக்கொருவர் குறை சொல்லி சமூக வலைதளங்களில் போர் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் சுமங்கிலி ராஜா அணியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சுரேஷ் பற்றியும், சுரேஷ் மீது உள்ள வழக்குகள் பற்றியும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து சுரேஷ், மனோஜ் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரும் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள மண்டபம் அருகே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சுமங்கலி ராஜா தரப்பில் அவர் உள்பட 3 பேரும், சுரேஷ் தரப்பில் சுரேஷ் உள்பட 3பேரும் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுமங்கலி ராஜா கூறும் போது வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னை செயல்பட வாய்மொழி உத்தரவிட்டதின் பெயரில் தான் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் சுரேஷ் மனைவி சத்யாவுக்கு மட்டும் பதவி வழங்கப்படும், சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவருக்கு பதவி கிடையாது என்று பொதுச் செயலாளர் சொன்ன பிறகும் தொடர்ந்து தன்னை இளைஞர் அணி நிர்வாகி என்று போட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: உடனே அந்த போட்டோக்கள நீக்குங்க.. விஜய்க்கு முன்பே முந்திக்கொண்டு உத்தரவு போட்ட என்.ஆனந்த்..!
இதனால் வாட்ஸ் அப்பில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தனது அணியை சேர்ந்த மனோஜ் என்பவர் சுரேஷ் மீது உள்ள வழக்குகள் குறித்து பதிவிட்டதற்கு அவரை மிரட்டினார், இது குறித்து கேட்கச் சென்ற எங்களை சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்தாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் கூறுகையில் தன்னைப் பற்றியும் , தனது சொந்த வாழ்க்கை பற்றியும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டதால் இது குறித்து கேட்க சென்றபோது, தங்களை சுமங்கலி ராஜா தரப்பினர் தாக்கியதாகவும், இதனை வீடியோ எடுத்த தனது மனைவி சத்யாவின் செல்போனையும் பிடுங்கி உடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ராஜா தரப்பு 3 பேர் மீது வழக்கும் சுரேஷ் தரப்பில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டியில் தமிழக வெற்றிக்கழகம் பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பதவி போட்டிக்காகவும் கட்சியினர் மீது இருக்கும் குற்ற வழக்கை வாட்ஸ்
அப் சமூக வலைதளங்களில் பதிவு செய்து சண்டையிட்டு வந்த சம்பவத்தால் கைகலப்பு வரை சென்று வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இதை முடிக்கலைன்னா அதிரடி ஆக்ஷன் பாயும் - தவெக நிர்வாகிகளுக்கு விஜய் எச்சரிக்கை!