செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி வீரா என்கிற வீராசாமி மீது கடந்த ஜூலை மாதம் பெரும் சர்ச்சை எழுந்தது. மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் இருந்த அவர், ஓர் ஒப்பந்ததாரரிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாம்பாக்கம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் பெற்றவரிடம், பில்லை விடுவிப்பதற்காக சுமார் ரூ.1.30 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது லஞ்சம் அல்ல என்றும், முன்பே தான் கொடுத்த கடனைத் திருப்பிப் பெற்றதாகவும் வீரா விளக்கம் அளித்தார். ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும், தன்னையும் முதலமைச்சர் விஜயையும் கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இருப்பினும் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. பின்னர் போலீசார் அவரைக் கைது செய்தனர்.கட்சியின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் கட்சி நிர்வாகி மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தபோது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
இந்த நிலையில் வீராசாமியின் மனைவிக்கு தமிழக வெற்றி கழகத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கணவனை நீக்கிவிட்டு இந்த மாதம் மனைவிக்கு புதிய பொறுப்பு வழங்குவதா என்றும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!