தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கு, வேட்பாளர்களின் நிதி வெளிப்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஆர். குமாரவேல் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு உடன் இணைக்கப்பட்ட சொத்து விவர அஃபிடவிட்டில், ரெட் ஜயண்ட் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தனது பெயரில் 7.36 கோடி ரூபாய் முதலீடு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 2026 தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்த முதலீடு முற்றிலும் இல்லை. அதற்கு பதிலாக, அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் பெயரில் அதே நிறுவனத்தில் 2.63 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு, சொத்துக்களின் மறைப்பு அல்லது தவறான வெளிப்பாடு என்ற சந்தேகத்தை எழுப்பியது.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!
மனுதாரர் குமாரவேல், உதயநிதி ஸ்டாலின் 2021 மற்றும் 2026 அஃபிடவிட்டுகளை ஒப்பிட்டு, சொத்து மதிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், கடன்கள், பிற நிறுவனங்களான ஸ்னோ ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராஜ் ப்ரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள், வருமான ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள சீரற்ற தன்மை மற்றும் கார்ப்பரேட் பதிவுகளுடன் பொருந்தாத தகவல்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விபரங்களை தாமாக முன்வந்து விசாரிக்கும் நடைமுறை துவங்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமானவரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் சொத்து விபரங்களை விசாரிக்கும் நடைமுறை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை பதில் தெரிவித்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விபரங்களை விசாரிக்க கூறிய வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள்..! வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்..!