மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்களில் சர்ச்சைகள், விபத்துகள் மற்றும் தார்மீகப் பொறுப்பை ஏற்று பதவி விலகிய மத்திய அமைச்சர்களின் வரலாறும் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அரசியலில் தார்மீகப் பொறுப்பை ஏற்று ராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்களில் முதன்மையாக குறிப்பிடப்படுபவர் லால் பகதூர் சாஸ்திரி. 1956-ஆம் ஆண்டு அரியலூர் ரயில் விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, 1958-ல் முந்த்ரா நிதி ஊழல் விவகாரத்தில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி நிதி அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போருக்குப் பிறகு பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து எழுந்த விமர்சனங்களையடுத்து வி.கே. கிருஷ்ண மேனன் பதவி விலகினார். பின்னர் 1987-ல் பாதுகாப்பு ஒப்பந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வி.பி. சிங் அமைச்சரவையை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: அப்போது விவசாயிகள்! இப்போது மாணவர்கள்! மோடியை அசைத்து பார்த்த மக்கள் சக்தி! பிரதான் ராஜினாமாவின் பின்னணி!

1993-ல் விமான விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று மாதவராவ் சிந்தியா ராஜினாமா செய்தார். 1999-ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கைசல் ரயில் விபத்திற்குப் பிறகு நிதிஷ் குமார் ரயில்வே அமைச்சர் பதவியை விட்டு விலகினார். 2008-ம் ஆண்டு மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான விமர்சனங்களால் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் பதவி விலகினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகவும் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஆ. ராஜா 2010-ல் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் தயாநிதி மாறன் 2011-ல் தனது அமைச்சரவைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். 2013-ல் ரயில்வே ஊழல் விவகாரத்தில் பவன் குமார் பன்சாலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் அஸ்வனி குமாரும் பதவி விலகினர். 2018-ல் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து எம்.ஜே. அக்பர் தனது இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது, நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகளின் பின்னணியில் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியலில் அமைச்சர்களின் ராஜினாமாக்கள் பெரும்பாலும் தார்மீகப் பொறுப்பு, நிர்வாகத் தோல்வி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களால் முக்கிய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: “நீட் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வாருங்கள்”... ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் நிதின் நபின் சவால்!