கோவை அருள்மிகு கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு கோவில் ஊழியர்களும், அலட்சியம் காரணமாக நடவடிக்கைக்கு உள்ளான நான்கு அதிகாரிகளும் என மொத்தம் எட்டு பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
கோனியம்மன் கோவில் வளாகத்தில் நிரந்தரமாக ஒன்பது உண்டியல்கள் மற்றும் திருப்பணிக்கான ஒரு தனி உண்டியல் செயல்பட்டு வருகிறது. மேலும், தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆறு தற்காலிக உண்டியல்களும் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ஆம் தேதி காலை முதல் இரவு வரை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, ஒரு உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கணக்கில் சேர்க்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களுடன் சேர்த்து மறைத்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சீட்டு விற்பனையாளர் பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு ஊழியர் பிரதீப் குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டாக செயல்பட்டு உண்டியலை மறைத்து வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் காணிக்கை பணம் முறைகேடாக கையாளப்பட்டதாக உறுதியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய நான்கு ஊழியர்களுடன், உண்டியல் எண்ணிக்கையின் போது முறைகேட்டை கண்டறியத் தவறியதாகக் கூறப்படும் ராம்குமார், உதயகுமார், குமார் மற்றும் உஷா நந்தினி ஆகிய நான்கு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தின் பாதுகாப்பு மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாத வகையில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?